கேரளா சென்ற மாணவர் தந்தை மரணம் நீட் தேர்வின் மூலம் மத்திய அரசு செய்த பச்சைப்படுகொலை.! – சீமான் கண்டனம்!

24

கேரளா சென்ற மாணவர் தந்தை மரணம் நீட் தேர்வின் மூலம் மத்திய அரசு செய்த பச்சைப்படுகொலை.! – சீமான் கண்டனம்!

நீட் தேர்வுக்காகக் கேரளா சென்ற மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள விளக்குடியைச் சேர்ந்த மாணவர் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வுக்காகக் கேரளா சென்றபோது அவரது தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பால் மரணம் அடைந்திருப்பது ஆழ்ந்த மனவேதனையையும், தாங்கொணாத் துயரத்தையும் தருகிறது.
பல்வேறு ஏற்றத்தாழ்வுகளையும், பொருளாதார மாறுபாடுகளையும், நிலவியல் வேறுபாடுகளையும் கொண்ட இந்நாட்டில் ஒற்றைத்தேர்வு முறையான நீட் என்பது சமூக நீதிக்கும், சனநாயகத்துக்கும் புறம்பானது எனத் தொடக்கம் முதலே இத்தேர்வு முறையினை எதிர்த்து வருகிறோம். வருணாசிரமத்தை வலியுறுத்தும் நவீன குலக்கல்வி திட்டமான நீட் தேர்வின் மூலம் கடந்தாண்டு தங்கை அனிதாவை காவுகொண்ட மத்திய அரசானது தனது கோரப்பசி அடங்காது இப்போது கிருஷ்ணசாமியைப் பலிகொண்டிருக்கிறது. நீட் தேர்வையே முழுவதுமாக எதிர்த்துத் தமிழகம் போராடிக் கொண்டிருக்கையில் வலுக்கட்டாயமாக நீட் தேர்வினை திணித்து அதுவும் வெளிமாநிலங்களில் கேரளாவிலும், இராஜஸ்தானிலும் நீட் தேர்வு மையங்களை அமைத்து வஞ்சகம் புரிந்தது மத்திய அரசு. இதன்மூலம் நீட் தேர்வை எதிர்கொள்ளாமலே இலட்சக்கணக்கான மாணவர்கள் தோல்வியுறுவார்கள் என எச்சரித்ததையும் மீறி நீட் தேர்வினை வேற்று மாநிலங்களில் அமைத்ததே இன்றைக்கு ஒரு உயிரைப் போக்கியிருக்கிறது.

தமிழகத்திலே உரிய கட்டமைப்பு வசதிகள் இருக்கிறபோதும் திட்டமிட்டு வேற்று மாநிலத்தில் நீட் தேர்வு மையங்களை அமைத்தார்கள். நீட் தேர்வு வேண்டாம் எனக் கூறிப் போராடுகிறவர்களை, நீட் தேர்வு மையங்களைத் தமிழகத்தில் அமைக்கக்கோரி போராட வைக்க வேண்டும் என்கிற உள்நோக்கம் ஒன்றே இதற்குக் காரணமாகும்.
நீட் தேர்வு மையங்களில் வினாத்தாள் வேற்று மொழியில் இருத்தல், வினாத்தாள் பற்றாக்குறை, ஒரே மாணவருக்கு இரு இடங்களில் தேர்வு மையம் ஒதுக்குதல், நுழைவுச்சீட்டு வராமலிருத்தல், நுழைவுச்சீட்டில் வரிசை எண் மாறியிருத்தல் எனப் பல்வேறு குளறுபடிகளோடும், குழப்பத்தோடும் நீட் தேர்வினை நடத்த வேண்டிய அவசியமென்ன வந்தது? வினாத்தாளையும், நுழைவுச்சீட்டையுமே குளறுபடிக்குள்ளாக வைத்துக்கொண்டு மாணவிகள் அணிந்திருந்த நகைகள் வரையிலும் கழற்றச் சொல்லி கெடுபிடி செய்வது யாரை ஏமாற்ற? இவ்வாறு கெடுபிடிகள் என்கிற பெயரில் மாணவர்களை வைத்ததன் மூலம் என்ன சாதித்தார்கள்? அனிதா என்கிற மகளைக் கொன்று தந்தையை அழ வைத்தவர்கள், இன்றைக்குத் தந்தை கிருஷ்ணசாமியைக் கொன்று மகனை அழ வைத்திருக்கிறார்கள். மருத்துவக் கனவோடு தேர்வேழுதச் சென்று தனது தந்தையை இழந்துவிட்டு தவிக்கும் அந்த இளம்பிள்ளைக்கு மத்திய, மாநில அரசுகள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? ஈடுசெய்ய முடியாத பேரிழப்பைச் சுமந்து நிற்கும் மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தினை என்ன வார்த்தைகூறி தேற்றப் போகிறார்கள்? தேர்வெழுதிவிட்டு வெளியே வந்து, தனது தந்தை இறந்ததுகூடத் தெரியாமல் ‘அப்பா எங்கே?’ எனக் கேட்ட அந்த மகனிடம் என்ன பதில் சொல்லப் போகிறது மத்திய அரசு?

மாணவனின் தந்தை கிருஷ்ணசாமியின் மரணத்திற்கு வெறுமனே நிவாரணம் அளிப்பது மட்டும் தீர்வாக அமையாது. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குப் பெறுவதே இனியும் இழப்புகளைச் சந்திக்காமல் தடுக்க இருக்கிற ஒரே வழியாகும். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவேண்டும் என்ற மக்கள் கோரிக்கை இனி மன்றங்களில் ஒலிக்கவேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திவிவசாயிகள் நலன் காக்க கர்நாடக தேர்தலில் தனித்துப் போட்டியிடும் கன்னட சகோதரன் தர்சன் புட்டனையாவிற்கு ஆதரவு – சீமான் அறிவிப்பு
அடுத்த செய்திஅறிவிப்பு: சேலம் – சென்னை இடையே புதிய 8 வழி சாலை திட்டத்தை எதிர்த்து மாபெரும் மக்கள் திரள் போராட்டம் | சீமான், பியுஸ் மனுஸ் பங்கேற்பு