ஒவியர் பாலா கைது கருத்துரிமைக்கு எதிரான பாசிச நடவடிக்கை! அராஜகத்தின் உச்சம்! – சீமான்

48

லைன்ஸ் மீடியா ஆசிரியர்,புகழ்வாய்ந்த பத்திரிக்கை கேலிச்சித்திர ஒவியர் தம்பி கார்ட்டூனிஸ்ட் பாலா அவர்களை இன்று திருநெல்வேலி காவல்துறை கைது செய்து இருப்பதாக வந்துள்ள செய்தி நமக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமை சுதந்திரத்தின் மீது நிகழ்த்தப்பட்ட பெரும் வன்முறையாகவே நான் கருதுகிறேன்.
இந்த சனநாயக நாட்டில் மாற்றுக் கருத்துக் கொண்டோரை எதிரிகளாக பாவித்து அச்சுறுத்துவதும், மாற்று சிந்தனையாளர்களை கைது செய்து சிறைப்படுத்துவதும் நடப்பது சனநாயக ஆட்சியா, இல்லை சர்வாதிகார ஆட்சியா என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது. குறிப்பாக மத்தியிலே பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மிகவும் மோசமான இந்நிலை..அதன் எடுபிடி அரசான தமிழ்நாட்டின் அதிமுக எடப்பாடி அரசிலும் தொடர்வது கொடுமையிலும் கொடுமை.
நாடறிந்த பத்திரிக்கையாளரான தம்பி பாலாவை நெல்லை போலீசார் அவர் வரைந்த கேலிச்சித்திரம் ஒன்றிற்காக கைது செய்வதாக கூறி ஒரு கொடும் குற்றவாளியை போல இல்லம் தேடி சென்று அவரது குடும்பத்தினர் முன்பாக தர தர வென இழுத்து சென்றிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. தம்பி பாலாவை மனித உரிமைகளுக்கு அப்பாற்பட்டு கைது செய்திருப்பதன் மூலம் சனநாயகத்தின் 4 ஆவது தூணான இதழியல் சுதந்திரத்தை எடப்பாடி அரசு இன்று கொளுத்தி குப்பையில் வீசி எரிந்திருக்கிறது.
நெல்லை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை ஆகியவற்றின் அலட்சியத்தால் கந்துவட்டிக் கொடுமையால் ஒரு குடும்பமே அழிந்ததை தனது கேலிச்சித்திரத்தின் மூலம் கார்ட்டூனிஸ்ட் பாலா வினா எழுப்பியது ஒரு மிகச்சாதாராண இதழியாலாளர்களுக்கே உரிய கடமை. நடந்திருக்கிற தவறுகளை திருத்திக் கொள்ள வக்கற்ற அரசு, கேள்வி எழுப்பியவர்களை சிறைப்படுத்தி ஒடுக்குவதன் மூலமாக நிலையாக நின்று விடலாம் என்று நினைப்பது அறிவீனம். தமிழ்நாட்டில் இக்காலத்தில் ஒரு அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் நடந்துக் கொண்டு இருக்கிறது என்பதையே கார்ட்டூனிஸ்ட் பாலாவின் கைது நடவடிக்கை காட்டுகிறது.

இன்று கைது செய்யப்பட்டுள்ள இதழியலாளர் கார்ட்டூனிஸ்ட் பாலா அவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்கினை திரும்பப்பெற்று உடனடியாக தமிழக அரசு அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும், இல்லையேல் பாலாவை விடுதலை செய்யக் கோரி மாபெரும் போராட்டங்களை இந்த அரசு சந்திக்க நேரிடும் என்பதையும், அப்போராட்டங்களில் எழும்பும் முழக்கங்கள் இந்த அரசிற்கான சாவு மணியாக விளங்கிடும் என்பதையும் நாம் தமிழர் கட்சி சார்பாக தெரிவிக்கிறேன்.

– சீமான்

முந்தைய செய்திமழைக்காலத்தில் செய்ய வேண்டிய முதன்மைப் பணிகள்..! – சீமான் வேண்டுகோள்
அடுத்த செய்திகொள்கைவிளக்க தெருமுனைக் கூட்டம் | 05-11-2017