அசாமில் தண்டிக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி இராஜமார்த்தாண்டன் மீதான நடவடிக்கை திரும்பப்பெற வேண்டும் -சீமான் வலியுறுத்தல்

25

நேர்மையாக விசாரணை மேற்கொண்டதற்காக அசாம் மாநிலத்தில் தண்டிக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி இராஜமார்த்தாண்டன் மீதான நடவடிக்கை திரும்பப்பெற வேண்டும் -சீமான் வலியுறுத்தல்

ஐ.பி.எஸ். அதிகாரி இராஜமார்த்தாண்டன் அவர்கள் அசாம் மாநில அரசால் அநீதி இழைக்கப்பட்டுப் பதவிபறிக்கப்பட்டுக் கைது செய்ப்பட்டிருப்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அசாம் மாநில அரசின் பழிவாங்கல் போக்கால் பதவிபறிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சார்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி இராஜமார்த்தாண்டன் அவர்கள் மீதான கைது நடவடிக்கை வன்மையானக் கண்டனத்திற்குரியதாகும். இந்நாட்டில் சட்டநெறிமுறைகளும், ஆட்சி அதிகாரங்களும் அதன் அமைப்பு கட்டுமானங்களும் எவ்வளவு பாழ்பட்டுப் போயிருக்கிறது என்பதற்கும், நேர்மையான அதிகாரிகள் தங்களின் நேர்மையான செயல்களுக்காக எந்தளவுக்குப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கும் இச்சம்பவம் ஒரு மிகச்சிறந்த சான்றாகும்.
வங்காளதேசப்பிரிவினைக்குப் பின்னர் கிழக்குப் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்த வங்காளிகள் தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வேண்டி அசாம் நிக்கில்பாரத் பங்காளி உட்பஸ்து சமந்வே சமித்தி (Nikhil Bharat Banglali Udbastu Samanway Samitee) எனும் தங்களின் அமைப்பின் சார்பில் கடந்த மார்ச் 06 அன்று பேரணியொன்றை நடத்தினார்கள். அப்பேரணியானது சில்பதார் எனும் பகுதியில் நடைபெற்றபோது அனைத்து அசாம் மாணவர்கள் கூட்டமைப்பினர் (All Assam Students’ Union) பேரணியில் பங்கேற்றவர்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் தொடுத்தார்கள். அதனால் ஏற்பட்ட கலவரத்தில் சில்பதாரில் அமைந்திருக்கும் அனைத்து அசாம் மாணவர் கூட்டமைப்பினரின் அலுவலகம் தாக்குதலுக்குள்ளானது.
இவ்விவகாரத்தில், பேரணியில் பங்கேற்ற வங்காள NIBBUSS அமைப்பின் முன்னணி தலைவர்கள் உள்ளிட்ட 60 நபர்களை அசாம் மாநிலக் காவல்துறை கைதுசெய்தது. இக்கலவரம் குறித்து விசாரணை செய்ய அசாமில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த இராஜமார்த்தாண்டன் எனும் ஐ.பி.எஸ். அதிகாரியைச் சிறப்புப்புலனாய்வுக் குழுவின் தலைவராக நியமித்தது அம்மாநில அரசு. அவ்விசாரணையில், கைதுசெய்யப்பட்டவர்களில் அனைவருக்கும் கலவரத்தில் தொடர்பில்லை என்பதும், வன்முறையைத் தொடங்கியது அனைத்து அசாம் மாணவர் கூட்டமைப்பினர்தான் என்றும் தெரியவரவே, உண்மைநிலையை அப்படியே அறிக்கையில் பிரதிபலித்து அதனைச் சமர்ப்பித்தார் ஐ.பி.எஸ். அதிகாரி மார்த்தாண்டம். இவ்வறிக்கையை NIBBUSS அமைப்பினர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி பெற்று அதனை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றத்தில் தங்களுக்கு விடுதலை கோரினார்கள். இதனால், கோபமுற்ற அசாம் மாநில அரசானது ஐ.பி.எஸ். அதிகாரி இராஜமார்த்தாண்டன் அவர்களைப் பணிநீக்கம் செய்ததோடு மட்டுமல்லாது அவரைக் கைதுசெய்து ஏப்ரல் 06 அன்று சிறையிலடைத்தது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அண்மையில் ஜூன் 14 அன்றுதான் பிணையில் வெளியே வந்திருக்கிறார் இராஜமார்த்தாண்டன்.
அவர் மீதான குற்றச்சாட்டாக, விசாரணை அறிக்கையை மேலதிகாரிகளின் அனுமதி பெறாமல் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி NIBBUSS அமைப்பினருக்கு வழங்கியதாகவும், ரகசிய தகவல்களை வெளியிட்டதாகவும் அதற்கு உள்நோக்கம் இருப்பதாகவும் குற்றஞ்சுமத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அவ்வாறு வழங்குவதற்கு மேலதிகாரியின் அனுமதி தேவை என அரசியலமைப்பில் எங்கும் வரையறை செய்யப்படவில்லை என்பதும், கலவரம் குறித்து இராஜமார்த்தாண்டன் தயாரித்த அறிக்கையானது முழுக்க முழுக்க நடந்த சம்பவங்களின் அடிப்படையில்தான் காணொளி ஆதாரத்துடன் தொகுக்கப்பட்டது என்பதும் தான் உண்மை. NIBBUSS அமைப்பினர் இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்போ அனுமதியின்றி இயங்கும் அமைப்போ அல்ல. அவர்களுக்குத் தன்னுடைய விசாரணை அறிக்கையைத் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விசாரணை அதிகாரி வழங்கியதில் எவ்வித சட்ட மீறலும் இல்லை. அதைவைத்து ஐ.பி.எஸ். அதிகாரி மார்த்தாண்டத்தைக் கைதுசெய்திருப்பது தான் அப்பட்டமான அதிகார அத்துமீறலாகும். குற்றமிழைத்தற்கு எவ்வித முகாந்திரமும் இல்லாதபோதும் அசாம் மாநில அரசின் பழிவாங்கல் நடவடிக்கையால் இரண்டு மாதங்கள் மார்த்தாண்டம் அவர்களைச் சிறையில் வைத்திருந்தது சனநாயகத் துரோகமாகும். ஆதாரங்களோடு விசாரணை ஆணையத்தின் அறிக்கையைத் தாக்கல்செய்த போதும், அசாம் மாநில அரசானது அனைத்து அசாம் மாணவர் கூட்டமைப்போடு கொண்டிருக்கிற உறவுகாரணமாக நேர்மையான ஒரு அதிகாரியை தண்டித்திருக்கிறது. மாநில அரசிற்கு ஆதரவாக நடக்கவில்லையென ஐ.பி.எஸ். அதிகாரியைச் சிறையிலடைத்திருப்பது ஒட்டுமொத்த இந்தியாவில் இயங்கும் நேர்மையான அதிகாரிகளுக்கு விடப்பட்ட நேரடிச்சவாலாகும். இதனை அனைத்து சனநாயகச் சக்திகளும் கண்டிக்க முன்வர வேண்டும்.
தமிழரான இராஜமார்த்தாண்டன் நேர்மையாகப் பணியாற்றியதற்காகப் பணிநீக்கம் செய்து சிறையிலடைத்தது மாபெரும் அநீதியாகும். எனவே, செய்யாத குற்றத்திற்குப் பணிநீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி மார்த்தாண்டம் மீதான நடவடிக்கைகள் உடனடியாக திரும்பப்பெறப்பட்டு, வழக்குகளிலிருந்து அசாம் மாநில அரசானது விடுவிக்க வேண்டும் எனவும், மத்திய அரசு இவ்விவகாரத்தில் தலையிட்டு உரிய நீதியைப் பெற்றுத் தந்து அவரைத் தமிழகத்திற்குப் பணி மாற்றம் செய்ய வேண்டும் எனவும், அதற்குத் தமிழக அரசு உரிய அழுத்தம் தர வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திமீத்தேன் திட்டத்தை எதிர்த்து பட்டினிப் போராட்டம் – மயிலாடுதுறை |சீமான் கண்டனவுரை
அடுத்த செய்திசெந்தமிழர் பாசறை – குவைத் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு