அறிவிப்பு: நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடுக்கும் நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை

32

அறிவிப்பு: நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடுக்கும் நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 100 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100 வது நாளான மே 22-ம் தேதி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடி நடத்தினர். காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்த உறவினர்கள் மீதும் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 30-05-2018 அன்று பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிட தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் ‘சமூக விரோதிகள் ஊடுருவலே இந்த வன்முறைக்கு காரணம் என்றும் ‘சமூகவிரோதிகள் யார் என்று உங்களுக்கு எப்படி தெரியும்?’ என்று ஒரு நிருபர் கேள்விக்கேட்டதற்கு ‘சமூக விரோதிகள் பற்றி எனக்கு எல்லாம் தெரியும்’ என்றும் குறிப்பிட்டார். மேலும் காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்தும் வகையிலும் எதற்கெடுத்தாலும் போராட்டங்கள் நடத்தினால் ஸ்டெர்லைட் ஆலை போன்ற தொழிற்சாலைகள் தொடங்க தமிழ்நாட்டிற்கு யாரும் வரமாட்டார்கள் அதனால் வேலைவாய்ப்பு பறிபோகும் என்றும் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பாதிக்கப்பட்ட மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியுள்ளார்.

அவரது கூற்றுப்படி தூத்துக்குடி வன்முறைக்கு காரணமானவர்கள் யார் என்றும் சமூகவிரோதிகள் ஊடுருவல் பற்றி
சம்பவம் நடைபெறுவதற்கு முன்கூட்டியே தெரிந்தும் நடிகர் ரஜினிகாந்த் காவல்துறையிடம் இதுபற்றி தெரிவிக்காதது சட்டப்படி குற்றமாகும். இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குத் தொடர நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் குழுவினர் இன்று 01-06-2018 வெள்ளிக்கிழமையன்று பிற்பகல் 12:30 மணியளவில் சென்னை, டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்று புகார் மனு வழங்கவுள்ளனர்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்தியார் சமூகவிரோதிகள்? – ரஜினியின் கருத்துக்கு கொந்தளித்த சீமான்
அடுத்த செய்திகச்சநத்தம்: சாதியப் படுகொலையுண்ட மூவர் உடலுக்கு வீரவணக்கம் | திருமாவளவன், பாரதிராஜா, சீமான் பங்கேற்பு