இலங்கை அதிபரின் வருகையால் எள்ளளவு நன்மையும் தமிழர்களுக்கு ஏற்படப் போவதில்லை! – சீமான் கடும் கண்டனம்!

18
இலங்கை அதிபர் மைத்ரி பாலா சிறீசேனா இந்தியாவுக்கு வருகை தருவதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:
இலங்கை அதிபர் மைத்ரி பாலா சிறீசேனா இந்தியாவுக்கு வருகை தருவதை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. சிங்கள இனவெறி அரசாங்கத்தின் அதிபர் பதவிக்கான முகங்கள் மாறினாலும், தமிழர்களுக்கு எதிரான எண்ணங்களும் அடக்குமுறைகளும் சித்ரவதை நிகழ்வுகளும் மாறாமல்தான் நீடிக்கின்றன. இனவெறிக் கொடூரனாக விளங்கிய ராஜபக்சேயின் ஆட்சியில் கொடூர போர் நடந்தபோது பாதுகாப்புத் துறையில் பணியாற்றி அப்பாவி மக்கள் மீது இரக்கமற்ற தாக்குதலை நடத்த காரணகர்த்தாவாக விளங்கிய மைத்ரி பாலா சிறீசேனாதான் இலங்கையின் புதிய அதிபராக தேர்வாகி இருக்கிறார். தான் தோல்வியடைந்ததற்கு தமிழர்கள்தான் காரணம் என ராஜபக்சே வெளிப்படையாகச் சொல்லியிருக்கும் நிலையில், தனது வெற்றிக்கு நன்றிகூறி பலரையும் நினைவுகூர்ந்திருக்கும் சிறீசேனா, மறந்தும்கூட தமிழர்களுக்கு நன்றி எனச் சொல்லவில்லை. இனவெறியில் ராஜபக்சேவுக்குக் கொஞ்சமும் குறைவில்லாதவர் சிறீசேனா என்பதற்கு இதைவிட உதாரணம் தேவை இல்லை.
இறுதிப்போரில் இலங்கை அரசின் இனப்படுகொலை குறித்த சர்வதேச விசாரணை தேவை என்கிற பன்னாடுகளின் வலியுறுத்தலுக்கு இதுகாலம் வரை புதிய அதிபர் பதில் கூறவில்லை. பன்னாட்டு ஆய்வுக்குழுவையும் பத்திரிகையாளர்களையும் இலங்கைக்குள் அனுமதிக்கவும் சிறீசேனா அரசு செவி சாய்க்கவில்லை. தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் இன்னமும் தொடர்ந்தபடியேதான் நீடிக்கின்றன. இலங்கை ராணுவம் தமிழர் பகுதிகளில் இருந்து இன்னமும் வெளியேறவில்லை. முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களுக்கு எத்தகைய நிம்மதியும் விடிவும் கிட்டியபாடில்லை. தமிழர்களுக்கான அரசியல் தீர்வை தமிழர்களே தீர்மானிப்பதற்கான முகாந்திரம்கூட இன்னமும் அமையாத நிலையில், சிறீசேனாவின் இந்திய வருகையால் தமிழர்களுக்கு எந்த நன்மையும் அமையப் போவதில்லை.
தமிழகத்தில் சிறப்பு முகாம்களில் உள்ள ஏதிலிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப, நேரடியாகவும் மறைமுகமாகவும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இலங்கையின் புதிய அரசு. இந்திய அரசுமுறைப் பயணத்தின் போதும் இலங்கை அதிபர் இதனை மறைமுகமாக வலியுறுத்த வாய்ப்பு இருக்கிறது. இலங்கையில் தனி முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழர்களின் துயரங்களே இன்னமும் தீர்வுக்கு வராத நிலையில், இங்கிருக்கும் தமிழர்களை அங்கே அழைத்துப்போய் எவ்வித நலனையும் இலங்கை அரசால் செய்துவிட முடியாது. தமிழர்களின் உயிர்பறிக்கும் கொடூரங்களை மறுபடியும் நடத்திக்காட்டவே இத்தகைய நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்கிறது.
எனவே, இலங்கை அதிபர் வருகையால் தமிழர்களுக்கு எத்தகைய நம்பிக்கையும் ஏற்படப் போவதில்லை. இலங்கை அதிபரின் இந்தியப் பயணத்தை ஒட்டி தமிழக மீனவர்களின் படகுகளை ஒப்படைக்க இலங்கை அரசு முன்வந்திருக்கிறது. பயணத்தின்போது ஏற்படுகிற இத்தகைய இணக்கம் மற்ற நேரங்களில் மட்டும் தாக்குதலாகவும் படகு பறிப்பாகவும் அமைவது ஏன்? ‘தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்’ எனச் சொல்லவோ, அதனைச் செய்யவோ விரும்பாத இலங்கை அரசு, நல்லெண்ண அடிப்படையில் படகுகளைத் திரும்பக் கொடுப்பதாக நாடகமாடுகிறது. வெளியளவில் நட்பு நாடாகவும் மனத்தளவில் தமிழர் விரோத அரசாகவுமே நாடகமாடும் இலங்கை அரசு தமிழர்களுக்கு எந்தக் காலத்தில் நன்மை பயக்கும் அரசாக அமையப்போவதில்லை. தமிழர் விரோத நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளாத சிங்கள அதிபரின் இந்திய வருகையால் எள்ளளவு நன்மையும் தமிழர்களுக்கு ஏற்படப் போவதில்லை. இலங்கை – இந்திய நாடக நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கும் நாம் தமிழர் கட்சி இலங்கை அதிபரின் வருகைக்கும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார்.
முந்தைய செய்திதிருவொற்றியூர் எம்.ஆர்.எப். தொழிலாளர்களுக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு
அடுத்த செய்திதிருவள்ளூர் தொகுதி கடம்பத்தூரில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது