காவிரி உரிமையை காவு கொடுக்கும் தேசியக் கட்சிகள்..! – சீமான் குற்றச்சாட்டு

76

கன்னியாகுமரியில் 04-02-2017 நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை முன்னெடுத்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் 9ஆம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு 05-02-2018 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் கூறியதாவது,

காணொளி:  https://youtu.be/54EWD4cTPrA

கர்நாடக அரசின் நிலைப்பாடும், மத்திய அரசின் நிலைப்பாடும்தான் காவிரிச்சிக்கலில் முதன்மையானதாக இருக்கிறது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தக் காலத்தில் அம்மையார் ஜெயலலிதாவும், கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரும் காவிரிச்சிக்கல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது, ‘ஒரு சொட்டுநீர்கூட தமிழகத்திற்குத் தர முடியாது’ எனக்கூறி பேச்சுவார்த்தையின்போது பாதியிலேயே வெளியேறி அவமதித்தவர் ஜெகதீஷ் ஷெட்டர். அன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசு அரசு இதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்றைக்கு கர்நாடகாவில் இருக்கிற ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒரே குரலில் தமிழகத்திற்குத் தருவதை வன்மையாக எதிர்க்கிறது. இதனைத்தான் பாஜகவின் மூத்தத் தலைவர் சுப்ரமணியசாமியும் சொல்கிறார். இதற்கெல்லாம் ஒரே தீர்வு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்றுதான் உச்ச நீதிமன்றத்தை நாடினோம். உச்ச நீதிமன்றமானது இரு மாதங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்குக் கெடுவிதித்தது. அந்தந்த மாநிலப் பிரதிநிதிகளையும் அமைக்க வலியுறுத்தியது. இதில் தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநில அரசுகள் அந்தந்த மாநில உறுப்பினர்களை நியமனம் செய்தது. ஆனால், கர்நாடகா தனது உறுப்பினரை நியமனம் செய்ய மறுத்தது.

மத்திய அரசானது அரசின் கொள்கை முடிவில் உச்ச நீதிமன்றம் தலையிடக்கூடாது; நாங்கள் சட்டமியற்றிப் பார்த்துக்கொள்கிறோம் என்று அறிவித்தது. ஆனால், இன்றுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முன்வரவில்லை. அந்தந்த மாநிலங்களின் வளங்கள் அந்தந்த மாநிலங்களுக்கென்றால் எங்களது நெய்வேலி பழுப்பு நிலக்கரி மின்சாரமும், நரிமணம் பெட்ரோலும், கூடங்குளத்திலிருந்து பெறப்படுகிற மின்சாரமும் தமிழகத்திற்கு மட்டுமே சொந்தம் என நாங்கள் மறித்தால் இந்தியாவின் இறையாண்மை என்னவாகும் என்பதனைச் சிந்திக்க வேண்டும். தமிழகத்திற்கு காவிரி நீர் வரும் என்று தமிழிசை சௌந்தரராஜன் கனவில் இருக்கிறார். கர்நாடகத்தில் ஆளுகிற உயரத்தில் காங்கிரசும், பாஜகவும் இருக்கிறது. அங்கு தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கிற காரணியாக காவிரிச் சிக்கல் இருக்கிறது. இதனால், ஒரு மாநிலத்தின் தேர்தல் வெற்றிக்காக ஒரு தேசிய இனத்தின் உரிமையைப் பலிகொடுக்க இரு தேசியக் கட்சிகளும் முயல்கிறது. முல்லைப் பெரியாறு நதிநீர் பங்கீடு சிக்கலிலும் இதே நிலைதான். இடதுசாரிகள் பொதுவுடைமை கட்சிகள் ஆண்டுகொண்டிருக்கும் கேரளாவிலிருந்து வீணாக கடலில் கலக்கும் நீரைக் கூடத் தமிழகத்திற்கு தர கேரள முதல்வர் பினராயி விஜயன் மறுக்கின்றனர். இதனால்தான் தேசியக் கட்சிகளை அறவே எதிர்க்கிறோம். தமிழ் இனமக்களின் உரிமைக்கு தேசியக்கட்சிகள் ஒருபோதும் துணை நின்றதில்லை, துணை நிற்கப்போவதுமில்லை. கடல்நீரைக் குடிநீராக மாற்றும் திட்டங்கள் எங்களுக்கு தெரியாதா அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்துங்கள் காவிரியில் தமிழர்களுக்கு உரிமை இருக்கிறதா இல்லையா? இல்லையென்று சொல்லிவிட்டால் அடுத்தகட்ட நகர்வுகளை முன்னெடுப்பது என்று எங்களுக்குத் தெரியும்.

நீட் தேர்வைப் பொறுத்தவரை அத்தேர்வு முறையே தேவையற்றது. ஒரு தேர்வின் மூலம் மருத்துவர்களைத் தரப்படுத்திவிடலாம் என்பதை ஒருபோதும் நாங்கள் ஏற்கவில்லை. அப்படியானால் நீட் தேர்வுக்கு முன்பாக தரமான மருத்துவர்களே உருவாகவில்லையா? நீட் தேர்வு எழுதாது ஏற்கனவே மருத்துவர்களானவர்களை என்ன செய்வார்கள்? நீட் தேர்வு எழுதி வருகிறவர்களுக்கு பாடம் நடத்துபவர்கள் ஏற்கனவே பாடம் நடத்தியப் பேராசிரியப் பெருமக்கள்தான் எனும்போது எப்படி கல்வியின் தரம் உயரும்? இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது வலிமையற்ற பாஜகவின் பினாமி ஆட்சி. பாஜக ஆட்சியின் நீட்சிதான் இது. அதனால், இது நீட் தேர்வினை எதிர்க்காது.

நாட்டின் பிரதமர் முன்பு டீ விற்றார். இப்போது நாட்டு மக்களை பக்கோடா விற்கச் சொல்கிறார். அவ்வளவு நல்ல வேலையென்றால் பிரதமர் மோடியும், பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷாவும் அதனை விற்று முன்மாதிரியாக திகழட்டும்,

முந்தைய செய்திவீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் 9ஆம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் நினைவுரை
அடுத்த செய்திஅறிவிப்பு: திருமுருகப் பெருவிழா – திருச்செந்தூரில் திரள்வோம்! தீந்தமிழ் முருகனைப் புகழ்வோம்!