சாலை சீரமைப்பு பணி – நீலமலை மாவட்டம் நாம் தமிழர் கட்சி திடீர் சாலை மறியல்.

55
பந்தலூர்:- நிறுத்தப்பட்ட பூதாலக்குன்னு இணைப்பு சாலை பணியை உரிய இடத்தில் மேற்கொள்ள வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.  பந்தலூர் அருகே உப்பட்டியிலிருந்து பூதாலக்குன்னு நெல்லியாளம் அரசுத் தேயிலைக் கோட்டம், கொளப்பள்ளி இணைப்பு சாலையில் 400மீ தூரத்திற்கு தார் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இப்பணி மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி சுமார் ரூ.10 லட்சத்தில் நெல்லியாளம் நகராட்சி சார்பில் நடந்தது. ஆனால், ஒப்பந்தம் கோரப்பட்ட பகுதியில் பணி மேற்கொள்ளாமல் நன்றாக இருக்கக்கூடிய சாலைப் பகுதியில் பணி மேற்கொள்ள முயற்சி நடந்தது. இதனால், அப்பகுதி மக்கள் சாலைப் பணியை சில தினங்கள் முன் தடுத்து நிறுத்தினர். கூடலூர் கோட்டாட்சியர் ஜெகஜோதி சம்பவ இடத்திற்கு சென்று ஒப்பந்தம் கோரப்பட்ட பகுதியில் சாலை பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மலைப்பகுதி மேம்பாடடுத் திட்ட இயக்குநர் சீனிவாச ரெட்டி அப்பகுதியை ஆய்வு செய்தார்.
நேற்று காலை சாலை பணிக்காக அப்பகுதியிலிருந்த உபகரணங்களை ஒப்பந்ததாரர் வேறு பகுதிக்கு எடுத்துச் செல்ல முயற்சித்ததால் பொது மக்கள் வாகனத்தை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த், நெல்லியாளம் நகர அமைப்பாளர் மோகனதாஸ், இளைஞர் பாசறை அமைப்பாளர் பாலசுப்பிரமணியம் முன்னிலையில் பொதுமக்கள் பூதாலக்குன்னு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, உரிய இடத்தில் சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். தகவலறிந்த பந்தலூர் வட்டாட்சியர் இன்னாசிமுத்து, தேவாலா டிஎஸ்பி கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடம் வந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கை நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர். இப்போராட்டம் நேற்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – மராத்திய மாநிலத்தில் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு.
அடுத்த செய்திநெல்லை மேற்கு மாவட்டம் சார்பாக புன்னைவனத்தில் நடைபெற்ற‌ மாவீரர் முத்து குமாரின் அவர்களின் நினைவேந்தல்.