ஒரத்தநாடு தொகுதி சார்பில் வெள்ளேரி தூர்வாரும் பணி: சீமான் நேரில் ஆய்வு

68

நாம் தமிழர் கட்சி – ஒரத்தநாடு தொகுதி சார்பில் வெள்ளேரி (வெள்ளூர் கிராமம்) தூர்வாரும் பணி: சீமான் நேரில் ஆய்வு

தஞ்சை மாவட்டம் வெள்ளூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் 183 ஏக்கர் பரப்பளவு கொண்ட வெள்ளேரியைத் தூர்வாரி வருகின்றனர். ஒரு மாத காலத்துக்கு மேல் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியை ’நாம் தமிழர் கட்சி’யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (12-07-2017) பார்வையிட்டு ஆய்வு செய்து கிராம மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சீமான், ’தமிழக அரசு ஆக்கிரமிப்பு செய்வதில் காட்டும் அக்கறையை ஏரி, குளங்களை ஆழப்படுத்துவதில் காட்டுவதில்லை. அரசுக்குப் பணத்தைக் கட்டிவிட்டு ஏரி குளங்களைத் தூர்வார வேண்டிய அவலநிலை உள்ளது. மேலும், அந்தந்தப் பகுதி விவசாயிகளுக்கு அதிகாரிகள் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். அதிகாரிகள் கிராமத்துப் பணிகளைச் செய்வதற்கு நெருக்கடி கொடுக்காமல் இருந்தால் மக்கள் வண்டல் மணலை அள்ளி ஏரி குளங்களைத் தூர்வாரிக் கொள்வார்கள்’ என்றார்.

செய்தியாளர் சந்திப்பு – காணொளி https://youtu.be/wKGCPhAziZ0

மேலும் அவர் கூறுகையில், ’ஆண்டுதோறும் 2500 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாகக் கலக்கிறது. வீணாகக் கலக்கும் தண்ணீரைச் சேமிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல், கடல்நீரைக் குடிநீராக்கி பாட்டிலில் அடைத்து விற்றால் மனிதர்கள் வாங்கிக் குடிப்பார்கள். எல்லாவற்றிலும் அரசு அதிகாரிகள் சுயநலமாகத்தான் இருக்கிறார்கள். மனிதர்கள் நாம் எப்படியோ தண்ணீர் குடித்துவிடுகிறோம். ஆனால், ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட மற்ற உயிரினங்கள் எங்கே போகுமென இந்த அதிகாரிகள் யோசித்துப் பார்த்தார்களா?’ என சீமான் கேள்வி எழுப்பினார்.

நன்றி: விகடன் http://www.vikatan.com/news/tamilnadu/95275-the-situation-of-animals-are-more-worse-than-humanbeings-says-seeman.html

முந்தைய செய்தி11-7-2017 மீண்டும் நெடுவாசலில் சீமான்..! – ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து முழக்கம்
அடுத்த செய்திகதிராமங்கலம் நிலத்தடி நீரின் ஆய்வு முடிவுகளை செய்தியாளர் முன்னிலையில் வெளியிட்ட சீமான்